பொள்ளாச்சி அருகே உச்சிமாகாளியம்மன், கருப்பராயன் கோவில்கள் கும்பாபிஷேகம்

புளியம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
புளியம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தைத் அடுத்து அம்மனுக்கு மகா அபிஷேகம், சர்வ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்து வருதல், புற்றுமண், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மாலை 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, தீபாராதனை, முதற்கால வேள்வி உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இன்று அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் காலை 6 மணிக்கு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை, விமான கோபுர கலசங்களில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மகாஅபிஷேகம், தசதரிசனம், தசதானம், சர்வ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோன்று பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் உள்ள கருப்பராயன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அதை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.






