வண்டிச்சோலையில் கோலாகல விழா.. மேள தாளம் முழங்க நடைபெற்ற உறியடி உற்சவம்


வண்டிச்சோலையில் கோலாகல விழா.. மேள தாளம் முழங்க நடைபெற்ற உறியடி உற்சவம்
x

மேள தாளம் முழங்க நடைபெற்ற உறியடி நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி, வண்டிச்சோலையில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று உறியடி மஹோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது வண்டிச்சோலையை சுற்றியுள்ள பகுதிகளில் 8 இடங்களில் உறியடி நடத்தப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டு புரட்டாசி 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று உறியடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவினையொட்டி ஹோமங்கள் நடத்தப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா புறப்படும் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் அருகே தெடங்கி வண்டிச்சோலை பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் 10 இடங்களில் கட்டப்பட்டிருந்த உறிகளை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமி தேவியர்களுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பேண்டு வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற உறியடி நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, இசைக்கு தக்கவாறு குதூகலமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுவாமி திருவீதி உலா சென்றபோது பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து பூஜை செய்து சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி வண்டிச்சோலை சாலை முழுவதும் பல வண்ண கோலமிடப்பட்டு, சாலை முழுவதும் வண்ணவிளக்கு தோரங்களால் அலங்கரிக்கப்பட்டு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜெயநாராயண கஜன சமரச நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story