வைகாசி தேய்பிறை அஷ்டமி: பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 20 May 2025 5:31 PM IST (Updated: 21 May 2025 12:38 PM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவரை வழிபடுவது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள் சாற்றி பைரவரை வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாற்றியும் வேண்டிக்கொள்வார்கள். மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாக படைப்பார்கள். அவ்வகையில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் சுவாமிக்கு புனித நீரால் நீராட்டு செய்யப்பட்டு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து செம்பருத்தி பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் நிற ஆடை உடுத்தி, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

வேத மந்திரங்கள் ஓத அர்ச்சனை செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், வளையல்களை பூஜையில் வைப்பதற்காக கொடுத்தனர். ஆண்கள், தங்களுடைய வாகனம், அலுவலக பணப்பெட்டி சாவி ஆகியவற்றை பூஜைக்காக கொடுத்து பெற்றுக் கொண்டனர்.

எள் தீபம்

இதேபோல் மண்மங்கலம் மணிகண்டேஸ்வர் கோவிலில் உள்ள பைரவருக்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும் நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர், காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதியமான்கோட்டை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை சாமி விஸ்வரூப தரிசனமும், இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், கோ பூஜை, அஸ்தவ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு 108 வகையான நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியையொட்டி சாமிக்கு 1008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் அஷ்டபைரவர் யாகமும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகள், சந்தன காப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க உற்சவமூர்த்தி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

சத்ரு சம்ஹார யாகம்

விழாவையொட்டி காலை முதல் இரவு வரை உழவாரப்பணி குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன், அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story