வைகாசி விசாக சிறப்பு வழிபாடு.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நாளில் சுவாமியை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. முருகன் கோவில்களில் விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெறும். பெரும்பாலான கோவில்களில் இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு பல்வேறு கோவில்களில் விசாகத் திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக விசாக நட்சத்திர நாளான இன்று விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருச்செந்தூர்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 4 மணிக்கு நடந்த சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அதிகாலை இருந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அதேபோல், அடையாள அட்டை கையில் அணிந்து வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு,கோவிலில் சாமி தரிசனத்திற்கு தனி வரிசை முறை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் வந்து மூலவரை தரிசித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பொது வழியில் மூலவரை தரிசிக்க இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று ஏரளாமான பக்தர்கள் குவிந்தனர். இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை காணவும் பக்தர்கள குவிந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சண்முகர் சன்னதியில உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. 5.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு காலை முதல் மதியம் வரை பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பாலால் முருகப்பெருமனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால் குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அபிஷேகம் செய்தனர்.
இதேபோல் சென்னை வட பழனி முருகன் கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்போரூர் முருகன் கோவிலிலும் வைகாசி விசாக சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழையனூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பழையனூர் காக்கையாடி ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் விசேச ஹோமம், ருத்ரஹோமம் செய்யப்பட்டு பின்னர் ஆறுமுகசுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகனுக்கு வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டில் அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து முருகன் வீதிவுலா காட்சி நடைபெற்றது.
சிக்கல்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கார வேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. கோவிலின் முன் மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி பக்தர்களால் சுமந்து கோவில் வலம் வந்து, கோவிலில் முன்புறம் சிறிய தேரில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் சிவ வாத்தியங்கள் முழங்க தேர் புறப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்து வேலி தெருக்களின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. மிகத் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருமலைக்கேணி
சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம்,விபூதி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி, வடமதுரை, திண்டுக்கல், நத்தம், செந்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதேபோல் வேம்பாரப்பட்டி, கோபால்பட்டி, சாணார்பட்டி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கம்பம்
கம்பம் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள சண்முகநாதர் கோயிலில் பால், பன்னீர், தயிர், இளநீர், தேன், விபூதி, மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், புஷ்பாபிஷேகம் பூஜைகள் நடை பெற்றன. பின்னர் மலர்களால் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.