தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Aug 2025 3:24 PM IST (Updated: 29 Aug 2025 3:46 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மேலூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைத்துவருகின்றனர். கோவில்கள், பொது நல சங்கங்கள், இந்து அமைப்புகள் சார்பில் காவல்துறை அனுமதியுடன் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை அனுமதித்துள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

மேலூர்

மேலூரில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் 35ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம், மேலூர் சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டது. மாநிலத் துணை தலைவர் பெரி.செல்லத்துரை, வழிகாட்டுதலின் பேரில் விவசாய அணி மாநில செயலாளர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் வாணவேடிக்கைகளுடன் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. விநாயகர் ஊர்வலத்தை கணேஷ் தியேட்டர் உரிமையாளர் கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விநாயகர் ஊர்வலம் நகை கடை பஜார், பெரிய கடை வீதி, செக்கடி, பஸ்ஸ்டாண்ட், அழகர்கோவில் ரோடு வழியாக சென்று மண்கட்டி தெப்பகுளத்தில் கொண்டு சென்று விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

விநாயகர் ஊர்வலத்தை யொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மேலூர் டி.எஸ்.பி சிவக்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 36 இடங்களில் காவல்துறை அனுமதியுடன் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று 14 விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக சாமியார்பேட்டைக்கும், 4 சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக கொள்ளிடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. எஞ்சிய கிராமப்புறங்களில் இருந்த 18 சிலைகளும் ஆங்காங்கே அருகிலிருந்த ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான காவலர்கள் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு பாதுகாப்பு வழங்கி, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினர்.

வந்தவாசி

வந்தவாசியில் தேரடி வேன் டிரைவர், கிளீனர் நலச் சங்கம் சார்பில் வந்தவாசி தேரடியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பிறகு இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. தேரடியிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ஊர்வலம் காந்தி ரோடு, அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு வழியாகச் சென்று சுகநதியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. மேலும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வந்தவாசி நகரில் வைக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பூமாலை செட்டிக் குளத்தில் கரைக்கப்படுகின்றன.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறை சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறை நகர தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். பாசறை மாநில சட்ட ஆலோசகர் ஏ.ஜி.மணிகண்டன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாசறை விநாயகர் சதுர்த்தி குழு மாநில தலைவர் எஸ்.கே.உதயகுமார், நிறுவனத் தலைவர் ஆதி மதனகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை நகரப் பகுதிகளில் 21 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 51 விநாயகர் சிலைகளும் காசாங்குளம் கரை சிவன் கோவில் வாசலில் வந்தடைகின்றன. பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெரு, சந்தையப்பன் மேடை தெரு ,குலால் தெரு ஆதித்தெரு,மேலத்தெரு உள்பட நகரில் பல பகுதியில் பிரதிஷ்டை செய்து 5 நாட்கள் வழிபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் காசாங்குளம் சிவன் கோவில் வந்தடைகின்றன.

அதன்பின்னர் மாலை 6 மணிக்கு காசாங்குளம் சிவன் கோவில் வாசலில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. காசாங்குளம் வடகரை, சீனிவாசபுரம், மயில் பாளையம், மணிக்கூண்டு, தலையாரி தெரு, தெற்கு காளியம்மன் கோவில் தெரு, அறந்தாங்கி சாலை, காந்தி சிலை, அண்ணா சிலை, மார்க்கெட் ரோடு, பெரிய கடை தெரு, பெரிய தெரு, மணிக்கூண்டு, பழனியப்பன் தெரு, பஸ் ஸ்டாண்ட், அதிராம்பட்டினம் சாலை, ஆண்கள் பள்ளி சாலை, மயில் பாளையம்,கண்டியன் தெரு, வளவன்புரம் வழியாக இரவு 8 மணியளவில் வெண்டாகோட்டை நசுவினி ஆற்றங்கரைக்கு ஊர்வலம் சென்றடைகிறது. பின்னர் ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்படுகின்றன.

நிலக்கோட்டை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளாம்பட்டி, நிலக்கோட்டை, சிலுக்குவார் பட்டி, கொடைரோடு ,அம்மைய நாயக்கனூர், அணைப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, தோப்புப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 112 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பாக அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்த ஊர்வலம் நிலக்கோட்டை நாலுரோடுக்கு நேற்று இரவு 7 மணிக்கு வந்தடைந்தது. அங்கு இந்து முன்னணி அமைப்பு மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சிலையாக அணிவகுத்து 112 சிலைகளும் முசுவனூத்து, சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி வழியாக சென்று அணைப்பட்டி வைகை ஆற்றில் விசர்சனம் செய்யப்பட்டது.

நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

1 More update

Next Story