வார விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வெளியூர் பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் பழனி அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது.
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி வழிபடுகின்றனர். வழக்கமான நாட்களைவிட வாரவிடுமுறை, முகூர்த்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
காலை முதலே பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில், பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல பயன்படுத்தும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.
இதனால் பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதாவது, தரிசனம் செய்வதற்கு சுமார் 1 1/2 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.
வெளியூர் பக்தர்கள் பழனிக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது. அதேபோல் தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்ல பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்ததால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






