உலகக் கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை


தினத்தந்தி 17 Dec 2022 11:36 PM GMT (Updated: 18 Dec 2022 4:51 AM GMT)

உலகக் கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட 'நம்பர் ஒன்' அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மல்லுகட்டுகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும்.




மெஸ்சியின் கனவு

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா அணி தொடக்க லீக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு அசுரவேக எழுச்சியோடு வீறுநடை போடுகிறது. அரைஇறுதியில் 3 கோல்கள் போட்டு குரோஷியாவை ஊதித்தள்ளியது.




கேப்டன் லயோனல் மெஸ்சி (5 கோல்), இளம் புயல் ஜூலியன் அல்வாரஸ் (4 கோல்) கூட்டணி தான் அர்ஜென்டினாவின் ஆணிவேராக விளங்குகிறது.

அர்ஜென்டினாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையை தனது தோளில் சுமக்கும் 35 வயதான மெஸ்சிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். அவரது விளையாட்டு வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்றால் உலகக் கோப்பையை வென்றாக வேண்டும். பந்தை துரிதமாக கடத்தி செல்வதிலும், லாவகமாக சகாக்களுக்கு தட்டிக்கொடுப்பதிலும் அற்புதமாக செயல்படும் மெஸ்சி, பந்துடன் வலையை நெருங்கினாலும் எல்லாநேரமும் அவரே கோலாக்க முயற்சிப்பதில்லை. எதிராளி தடுத்துவிடுவார் என்று உணர்ந்து விட்டால் கனநேரத்தில் அருகில் உள்ள சக வீரருக்கு பந்தை 'பாஸ்' செய்து விடுகிறார். குரோஷியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதமே அதற்கு உதாரணம்.

அர்ஜென்டினா நாட்டு கால்பந்தின் அடையாளமாக உள்ள டியாகோ மரடோனாவுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் மெஸ்சி, அதற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிரூபிக்க இதுவே கடைசி சந்தர்ப்பமாகும். 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் 'மேஜிக்' நிகழ்த்துவாரா? என்பது இன்றிரவு தெரிந்து விடும்.

பிரான்ஸ் எப்படி?

ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 1962-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து உலக கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற சாதனையை படைக்க வரிந்து கட்டுகிறது. பின்களம், நடுகளம், முன்களம் என்று அனைத்து துறையிலும் தனது பலத்தை நிரூபித்துள்ள பிரான்சுக்கு மின்னல் வேகத்தில் விளையாடுவது கூடுதல் பலமாகும்.

இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள கிலியன் எம்பாப்பே, 4 கோல் போட்டுள்ள ஒலிவியர் ஜிரூட், 3 கோல் அடிக்க துணை நின்றுள்ள கிரீஸ்மான் மற்றும் பெர்னாண்டஸ், கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிஸ் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

குறிப்பாக எம்பாப்பே தான் எதிரணியின் பிரதான குறியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சிறிய இடைவெளி கிடைத்தாலும் பந்தை அசுர வேகத்தில் வலைக்குள் புகுத்தி விடுவதில் அசாத்திய திறமைசாலி. கால்இறுதி மற்றும் அரைஇறுதியில் அவர் கோல் அடிக்காவிட்டாலும் கூட முன்களத்தில் அவரை மையப்படுத்தியே பிரான்சின் கள வியூகம் வகுக்கப்படுகிறது. கிரீஸ்மான், ஜிரூட்டும் அவரை போன்று அபாயகரமானவர்களே. பிரான்ஸ் அணியில் சில வீரர்கள் வைரஸ் தொற்றால் உடல்நலக்குறைவுக்கு ஆளான போதிலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை, முழு கவனமும் இறுதிப்போட்டி மீதே இருப்பதாக பயிற்சியாளர் டெசாம்ப்ஸ் தெரிவித்தார்.




முதல் கோல் தான்...

எப்படி பார்த்தாலும் எல்லா வகையிலும் அர்ஜென்டினாவுக்கு நிகராக பிரான்ஸ் காணப்படுகிறது. அதனால் வெற்றியை வசப்படுத்துவது யார்? என்பதை கணிப்பது நிச்சயம் கடினம் தான். ரசிகர்களின் இடைவிடாத கரகோஷத்துக்கு மத்தியில் உச்சக்கட்ட நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். ஆனாலும் யார் முதல் கோலை அடிக்கிறார்களோ, ஆட்டத்தில் அந்த அணியின் கையே ஓங்கி நிற்கும்.




எம்பாப்பே

களம் இறங்கும் தொடக்க வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

அர்ஜென்டினா: எமிலியானா மார்ட்டினஸ் (கோல் கீப்பர்), மோலினா, கிறிஸ்டியன் ரோமிரோ, ஒட்டாமென்டி, மார்கஸ் அகுனா, ரோட்ரிகோ டி பால், லியான்ட்ரோ பரேட்ஸ், என்ஜோ பெர்னாண்டஸ், மாக் அலிஸ்டர், லயோனல் மெஸ்சி (கேப்டன்), அல்வாரஸ்.

பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கேப்டன்), ஜூலஸ் கோன்டே, ரபெல் வரானே, இப்ராகிமா கொனேட், லூகாஸ் ஹெர்னாண்டஸ், அட்ரியன் ராபிட், சுவாமெனி, டெம்பெலே, கிரீஸ்மான், எம்பாப்பே, ஒலிவியர் ஜிரூட்.

இரவு 8.30 மணிக்கு...

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். தோல்வி அடையும் அணி ரூ.244 கோடியை பரிசாக பெறும்.

''மெஸ்சியா? எம்பாப்பேவா? இருவரில் களத்தில் மிரட்டப்போவது யார் என்று ஒரு பக்கம் ஆர்வம் தொற்றியுள்ள நிலையில் அவர்களிடையே இன்னொரு குடுமிபிடியும் நிலவுகிறது.

தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் இருக்கும் அவர்களில் யாருக்கு தங்க ஷூ விருது கிடைக்கப்போகிறது என்பதும் இறுதிப்போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் எகிற வைக்கிறது''

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த விதம்

அர்ஜென்டினா

லீக் சுற்று:

1-2 கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் தோல்வி.

2-0 கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.

2-0 கோல் கணக்கில் போலந்தை போட்டு தாக்கியது.

2-வது சுற்று

2-1 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது.

கால்இறுதி

பெனால்டி ஷூட்-அவுட்டில் (4-3) நெதர்லாந்தை பதம் பார்த்தது.

அரைஇறுதி

3-0 கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது.

பிரான்ஸ்

லீக் சுற்று

4-1 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.

2-1 கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.

0-1 கோல் கணக்கில் துனிசியாவிடம் தோற்றது.

2-வது சுற்று

3-1 கோல் கணக்கில் போலந்தை தோற்கடித்தது.

கால்இறுதி

2-1 கோல் கணக்கில் இங்கிலாந்தை சாய்த்தது.

அரைஇறுதி

2-0 கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது.


Next Story