உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை பந்தாடியது பிரான்ஸ் அணி - எம்பாப்வே 2 கோல் அடித்து கலக்கல்


உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை பந்தாடியது பிரான்ஸ் அணி - எம்பாப்வே 2 கோல் அடித்து கலக்கல்
x
தினத்தந்தி 4 Dec 2022 7:17 PM GMT (Updated: 4 Dec 2022 8:34 PM GMT)

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போலந்தை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி பந்தாடி கால்இறுதிக்குள் நுழைந்தது.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போலந்தை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி பந்தாடி கால்இறுதிக்குள் நுழைந்தது. எம்பாப்வே 2 கோல்கள் அடித்தார்.

ஜிரூட் சாதனை

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, போலந்தை எதிர்கொண்டது. முதல் வினாடியில் இருந்தே இரு அணியினரும் ஆக்ரோஷமாக, தாக்குதல் பாணியில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் போலந்து ஓரளவு ஈடுகொடுத்து ஆடியது. 35-வது நிமிடத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே அடித்த ஷாட்டை போலந்து கோல் கீப்பர் வோஜ்சிச் சிஸ்னி தடுத்தார். 37-வது நிமிடத்தில் போலந்தின் அருமையான ஷாட்டில் இருந்து பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ் தற்காத்தார். 44-வது நிமிடத்தில் பிரான்சின் ஒலிவியர் ஜிரூட் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். அவருக்கு இது 52-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் பிரான்ஸ் வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவரான தியரி ஹென்றியின் (51 கோல்) சாதனையை முறியடித்தார்.

கால்இறுதியில் பிரான்ஸ்

அதன் பிறகு பிரான்சின் கை முழுமையாக ஓங்கியது. களத்தில் பம்பரமாக சுழன்று வந்த எம்பாப்வே 74-வது நிமிடத்திலும், 90-வது நிமிடத்திலும் பிரமாதமான ஷாட்டுகள் மூலம் கோல் போட்டு எதிரணியை திக்குமுக்காட வைத்தார். இவற்றையும் சேர்த்து நடப்பு தொடரில் எம்பாப்வே மொத்தம் 5 கோல்கள் போட்டு தங்க ஷூக்கான வாய்ப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட 9 நிமிடங்களில் போலந்து ஆறுதல் கோல் போட்டது. அதுவும் பிரான்ஸ் வீரர் உபாமிகானோவின் கையில் பந்து பட்டதால் போலந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் போலந்து கேப்டன் ராபர்ட் லெவான்டாஸ்கி கோல் போட்டார்.

முடிவில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் போலந்தை துவம்சம் செய்து கால்இறுதிக்குள் நுழைந்தது. பிரான்ஸ் அடுத்து இங்கிலாந்து அல்லது செனகல் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

பீலேவின் சாதனையை முறியடித்த எம்பாப்வே

பிரான்ஸ் வீரர் 23 வயதான கிலியன் எம்பாப்வே கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 கோல்கள் அடித்திருந்தார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் போட்டுள்ளார். ஆக மொத்தம் உலகக் கோப்பையில் அவரது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 24 வயதை தொடுவதற்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பிரேசில் ஜாம்பவான் பீலேவின் (7 கோல்) சாதனையை தகர்த்தார்.


Next Story