உலகக்கோப்பை கால்பந்து: 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது பிரேசில்
பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் 'ஜி' பிரிவில் அரங்கேறிய ஆட்டத்தில் பிரேசில் மற்றும் செர்பியா அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
இந்த நிலையில் 62-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லீசன் முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து 11 நிமிடங்களுக்குப் பிறகு 73-வது நிமிடத்தில் அவரே 2-வது கோலை அடித்து அசத்தினார். அதன் பிறகு இரு அணிகளிலும் கோல் விழவில்லை. இறுதியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.