உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி அளித்து மொராக்கோ அபார வெற்றி
புள்ளிப்பட்டியலில் மொராக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியின் 73-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அப்தெல் ஹமீது சபிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் சகாரியா அபுக்லால் ஒரு கோல் அடித்தார். இறுதியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் குரூப் எப் பிரிவு புள்ளிப்பட்டியலில் மொராக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.