தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் உருவாகுமா?

சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பது கட்டுக்கதையே. ஏனெனில் உலகளவில் பொதுவாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி விளங்குகிறது. அதனை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்?
சிறுநீரக கற்கள்.. தடுப்படி எப்படி?
உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரக கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
உணவு பழக்கவழக்கம்
சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல. கால்சியம் ஆக்சலேட் உள்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உருவாகலாம். இருப்பினும் ஆக்சலேட் படிகங்கள் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது. தக்காளியில் ஆக்சலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களுடன் முடிச்சு போட்டுவிட்டனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக கற்களை ஏற்படுத்த போதுமானதல்ல.
இதேபோல் சில அசைவ உணவுகள் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதுவும் தவறானது. உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் சேர்வது காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மீன் மற்றும் விலங்கு இறைச்சியிலுள்ள புரதங்கள் உள்ளிட்ட பியூரின் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். எனினும் இந்த விஷயத்தில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்காது. மருத்துவர்களின் ஆலோசனையும், மருந்துமே கைகொடுக்கும்.
காரணம் என்ன?
அடிப்படை உடல்நலப்பிரச்சினை, சில நொதிகளின் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்றப்பிரச்சினைகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். குறிப்பாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து கால்சியம் ஆக்சலேட் படிகங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை நிறுத்தும்போது ஆக்சலோசிஸ் என்னும் பாதிப்பு உருவாகும். இது அரிய வகை வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை நிறுத்தி ஆக்சலேட் படிகங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.






