பக்கவாத பாதிப்புகளை சரிசெய்யும் சித்த மருந்துகள்

பக்கவாதத்தினால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளை குணப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன.
"பக்கவாதம்" என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன், சக்தி இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும். இது இஸ்கீமிக் ஸ்ட்ரோக், ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக் என்று வகைப்படுத்தப்படுகிறது.
1. "இஸ்கீமிக் ஸ்ட்ரோக்"- மூளையிலுள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கொழுப்பு படிவதால் வரும் அடைப்புகளால், மூளையின் இரத்த ஓட்டம் திடீரென தடை படுவதால் வருவது ஆகும்.
2. "ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்"-மூளையின் இரத்த குழாய்களில் ஏற்படும் கசிவுகள், இரத்த குழாய்கள் கிழிந்து அதிலிருந்து வெளியேறும் இரத்தம் இவைகளால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம், இரத்த குழாய்கள் வீங்கி (அனியுரிசம்)உடைந்து இரத்தம் வெளியேறுதல், தலையில் ஏற்படும் காயங்கள், விபத்துக்கள் இவைகளால் ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
குறி குணங்கள்:-
1. உடல் சமநிலை இழத்தல்
2. முகம் ஒரு புறமாக இழுத்தல்.
3. ஒரு பக்க கை, கால்களின் செயல்பாடு இழத்தல். கை, கால்கள் பலவீனமடைதல்
4. பேச்சு குழறல் அல்லது பேச முடியாமல் போதல்
5. கண் பார்வை மங்குதல்.
காரணங்கள்:
1. பரம்பரையில் பக்க வாதம் இருப்பது.
2. உயர் இரத்த அழுத்தம்,இதய நோய் வரலாறு
3. இரத்தத்தில் அதிகரித்த கொழுப்புகள்
4. புகைப் பிடித்தல், தொடர் மதுப் பழக்கம்
5. கட்டுப்பாடில்லா நீரிழிவு நோயின் பாதிப்புகள்
6. உடல் பருமன், சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது
7. உறக்கத்தில் குறட்டை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் திடீர் மூச்சு திணறல் (சிலிப் அப்னியா)
8. தலை, மூளைக் காயங்கள் இவைகளை தொடர்ந்து, பக்க வாதம் வருகிறது.
பக்கவாதம் சிகிச்சைகள்:
பக்க வாதம், வந்தவுடன் அல்லது குறிகுணங்கள் தெரிந்தவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனே நவீன மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். காலம் பொன்னானது. ஆகவே சுய மருத்துவம் எடுக்காமல், மூளை, நரம்பியல் மருத்துவர்களை அணுக வேண்டும்.
பக்கவாதத்தினால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளை குணப்படுத்த ஏராளமான சித்த மருத்துவ தீர்வுகள் உள்ளன.
1. பக்க வாதத்தில் ஏற்படும் பேச்சு குழறலுக்கு அண்ட தைலம் 1 சொட்டுஅல்லது 2 சொட்டு நாக்கின் அடியில் தொட்டு வைக்க வேண்டும். இது நாட்பட நல்ல பலனைத் தரும்.
2. கை, கால் செயலிழப்பு, முகம் ஒரு பக்கமாக இழுத்தல் இவைகளுக்கு; திரிகடுகு சூரணம் -1 கிராம், சண்ட மாருதச் செந்தூரம் -100 மிகி, முத்துச் சிப்பி பற்பம் -200 மிகி இவைகளை மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
திரிபலா சூரணம் -1 கிராம், நவ உப்பு மெழுகு -100 மிகி இவற்றை இருவேளை சாப்பிட வேண்டும்.
3. முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதற்கு உளுந்து தைலம் அல்லது விடமுட்டி தைலம் பயன்படுத்த வேண்டும்.
4. கை, கால்களை தேய்த்து மசாஜ் செய்வதற்கு, சிவப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம், கற்பூராதி தைலம், சித்திரமூலத் தைலம் இவற்றை பயன்படுத்த வேண்டும்.
5. மலச் சிக்கல் இருந்தால், நிலவாகை சூரணம் -1 கிராம் வெந்நீரில் இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.
6. இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு நீரிழிவு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
7. மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
8. குளிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்துவது சிறந்தது.






