மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வாக்கு எண்ணிக்கை: கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?


மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வாக்கு எண்ணிக்கை: கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
x
தினத்தந்தி 13 May 2023 1:11 AM GMT (Updated: 13 May 2023 4:37 AM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஒட்டு மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

73.19 சதவீதம் வாக்குப்பதிவு

பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,430 ஆண்களும், 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ந் தேதி நடைபெற்ற தேர்தலின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 70 ஆயிரத்து 300 வாக்குப்பதிவு எந்திரங்களும், 76 ஆயிரத்து 202 வி.வி.பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம்) பயன்படுத்தப்பட்டது.

இன்று ஓட்டு எண்ணிக்கை

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது.

மொத்தம் 306 அறைகளில், 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் 4,256 மேற்பார்வை யாளர்கள், 4,256 உதவியாளர்கள், 224 வருவாய்த்துறை அதிகாரிகள், 317 உதவி வருவாய்த்துறை அதிகாரிகள், 450 கூடுதல் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். இதுதவிர 4,256 நுண் அலுவலர்களும் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் பணியை கேமராவில் வீடியோ பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

தபால் ஓட்டு

முதலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இந்த முறை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டுப்போட்டனர். இதனால் அரசு ஊழியர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

அதன் பிறகு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், எந்தெந்த வேட்பாளர்கள் எவ்வளவு ஓட்டு பெற்றுள்ளார்கள் என்ற விவரம் அறிவிக்கப்படும்.

ஆட்சியை பிடிப்பது யார்?

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதால், மதியம் 1 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் வெற்றி-தோல்வி நிலவரம் தெரிந்துவிடும். கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? என்று அறிய மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாஜக, காங்கிரஸ் ஆலோசனை

பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவே கூறி இருப்பதால், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு இருந்தது. அதுபோல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசித்திருந்தார்.

காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காத பட்சத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடனும், சுயேச்சையாக வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களுடன் தான் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கூட்டணி முயற்சி

இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போதே தேவேகவுடா, பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக தன்னுடன் பேசியதாக கூறியிருந்தார். தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி நடத்தவும், இது முடியாவிட்டால் ஜனதாதளம் (எஸ்) கட்சி துணையுடன் கூட்டணி அமைக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன.

குமாரசாமி நிபந்தனைகள்

இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கூட்டணிக்கு எந்த கட்சி சம்மதம் தெரிவித்தாலும் எங்களின் கோரிக்கைகள், நிபந்தனைகளை உடன்படுபவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்றும் தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முதல்-மந்திரி பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்த கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது. ஜனதாதளம் (எஸ்) கட்சி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் முடிவுக்கு பிறகு....

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கிகள் அதிகமுள்ள பழைய மைசூரு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் தலையிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை குமாரசாமி விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் குமாரசாமி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தேர்தல் முடிவை பொறுத்தே 3 கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்த 10-ந்தேதி நள்ளிரவே குமாரசாமி சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் இன்று காலை பெங்களூருவுக்கு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் 144 தடை உத்தரவு

பெங்களூருவில் ஓட்டு எண்ணிக்கையையொட்டி நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருப்பதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது இன்று காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊர்வலம், போராட்டம் நடத்துவதற்கும், ஒரே இடத்தில் 5 பேர் சேர்ந்து நிற்கவும் அனுமதி கிடையாது.

இதுபோல், மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மறுநாள் (14-ந்தேதி) காலை 6 மணி வரை மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story