ராஜஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு


ராஜஸ்தானில் பஸ்  தீப்பிடித்ததில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 Oct 2025 10:50 PM IST (Updated: 14 Oct 2025 11:00 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்சால்மரில் பஸ் தீ விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சிங் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மரில் உள்ள தையாத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே பயணிகள் 57 பேருடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சுக்குள் இருந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 20 பேர் துடிதுடித்து தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும், 16 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அருகிலுள்ள ராணுவப் போர் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சிங் கூறியதாவது:

ஜெய்சால்மரில் பஸ் தீ விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மாநில அரசு துணை நிற்கிறது, மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story