மாலேகான் குண்டுவெடிப்பு: 7 பேரும் விடுதலை


மாலேகான் குண்டுவெடிப்பு: 7 பேரும் விடுதலை
x
தினத்தந்தி 31 July 2025 11:28 AM IST (Updated: 31 July 2025 3:27 PM IST)
t-max-icont-min-icon

நாட்டையே உலுக்கிய குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வெளியானது.

மும்பை,

நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரகிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குர்கர்னி ஆகிய 7 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.

இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்(உபா) மற்றும் இந்திய தண்டனை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கை முதலில் மராட்டிய பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரித்து வந்தது. பின்னர் 2011-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நிறைவடைந்தது. பின்னர் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது என்.ஐ.ஏ. தனது இறுதி வாதத்தில், "முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரமான மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பு, முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியை பயமுறுத்தவும், வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கவும், மாநிலத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தவும் சதிகாரர்களால் திட்டமிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த பெரிய சதியில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தகுந்த சாட்சியங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்" என தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை, ஏனென்றால் எந்த மதமும் வன்முறையை ஆதரிக்க முடியாது. வெறும் கருத்து மற்றும் தார்மீக ஆதாரங்களை வைத்து நீதிமன்றம் யாரையும் தண்டிக்க முடியாது; உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும். குண்டுவெடிப்புக்கான சதித்திட்டம் தீட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஸ்ரீகாந்த் புரோகித் ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. குண்டு இருந்ததாக கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்கு சொந்தமானது என ஆதாரம் இல்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் மருத்துவ சான்றிதழ்களில் மோசடி இருப்பதாக தெரிகிறது. மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத்தரப்பு நிரூபிக்கவில்லை என கூறி பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 7 பேரையும் விடுவிக்க தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 17 ஆண்டுகால வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும் குண்டுவெடிப்பில் பலியான ஆறு பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும், காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story