தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை சரிவு: பவுன் ஒரு லட்சத்திற்கும் கீழ் வந்தது

தங்கம் விலை இன்று காலை ரூ.400 குறைந்த நிலையில், மாலையும் ரூ.560 குறைந்துள்ளது.
சென்னை,
தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்தை தாண்டி தங்கம் விலை அதிர வைத்தது. எனினும், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகின்றன. நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.420 குறைந்து, ரூ.12,600க்கு விற்பனையானது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து, ஒரு கிராம் ரூ.258க்கு விற்பனையானது. இதனால் 3வது நாளாக தங்கம் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த வகையில், தங்கம் விலை 3வது நாளாக இன்றும் சரிந்தது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,550க்கு விற்பனையானது. அதேபோல் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,400க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி அதே விலையான ரூ.258க்கு விற்பனையானது. காலையில் விலை சரிந்ததால் தங்க நகை பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மாலையிலும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.99,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,000 சரிந்து, ஒரு கிலோ ரூ.2.57 லட்சமாக விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.960 குறைந்து, பவுன் ஒரு லட்சத்திற்குக் கீழ் வந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.






