தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து சவரனுக்கு ரூ.64,560 ஆக விற்பனையாகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 11-ந் தேதி ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே பவுனுக்கு ரூ.960 சரிந்து சற்று ஆறுதல் அளித்தது. அதன் பிறகு 13, 14-ந் தேதிகளில் விலை மீண்டும் உயர்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து 15-ந் தேதி பவுனுக்கு ரூ.800 குறைந்து, 17-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இப்படியாக ஏற்ற, இறக்கத்துடனேயே பயணித்து வரும் தங்கம் விலை, நேற்றும் அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 35-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது . இதன் மூலம் தங்கம் விலை 2-வது முறையாக ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.280 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.64,560 ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109 க்கு விற்பனையாகிறது.