மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
x

வியாபாரிகள் கணிப்பையெல்லாம் தவிடுபொடியாக்கி நேற்று தங்கம் விலை சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது. முன்னதாக தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது.

இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கி உள்ளது.

கடந்த 22-ந் தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு வந்தது. அதனைத்தொடர்ந்தும் விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலையில் அதிரடி சரிவை பார்க்க முடிந்தது. விலை ஏற்றம் கண்டபோது தினமும் 2 முறை உயர்ந்து காணப்பட்டதோ, அதேபோல், தற்போது விலை சறுக்கலிலும் 2 முறை சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.

ஆக நேற்று முன்தினம் விலையை காட்டிலும், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.375-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

வெள்ளி விலை

இதேபோல வெள்ளி விலையும் பெருமளவில் சரிந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 25, 26, 27-ந் தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கணிப்பு தவிடு பொடியானது

விலை உயர்ந்த போது ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எப்போது தாண்டுமோ? என அச்சத்தை ஏற்படுத்திய தங்கம், விலை குறையத் தொடங்கியதும் ரூ.90 ஆயிரத்துக்கும், அதற்கு கீழும் எப்போது குறையும்? என்ற எதிர்பார்ப்பை கொடுத்தது. ஆனால் நகை வியாபாரிகள் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறினர். வியாபாரிகளின் கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில், நேற்று விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழே சென்றது.

தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 17-ந் தேதி உச்சத்தை தொட்ட பிறகு விலை சறுக்கலை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததே, இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

29.10.2025 ஒரு சவரன் ரூ.89,680 (இன்று)

28.10.2025 ஒரு சவரன் ரூ.88,600 (நேற்று)

27.10.2025 ஒரு சவரன் ரூ.91,600

26.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

25.10.2025 ஒரு சவரன் ரூ.92,000

24.10.2025 ஒரு சவரன் ரூ.91,200

1 More update

Next Story