மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 112 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்

விமானத்தில் அசாம்-வங்கதேச எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு வங்கதேச பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மும்பை,
மும்பை பெருநகரில் சட்டவிரோதமாக அதிகளவில் வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். போலீசார் அவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை பெருநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த 112 வங்கதேசத்தினர் கடந்த வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் 92 பேர் மும்பையிலும், 20 பேர் மிராபயந்தர், தானே பகுதியிலும் வசித்து வந்தவர்கள் ஆவர். 112 பேரும் புனே கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் அசாம் - வங்கதேச எல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், வங்கதேச பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மும்பையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 92 பேரில் 40 பேர் பெண்கள். 34 பேர் சிறுவர்- சிறுமிகள். 18 பேர் ஆண்கள். இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் மும்பையில் இருந்து வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 719 ஆக அதிகரித்து உள்ளது. 2024-ம் ஆண்டு மும்பையில் இருந்து 152 வங்கதேசத்தினர் மட்டுமே நாடு கடத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






