செல்பி எடுத்தபோது 8-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

கோப்புப்படம்
மும்பையில் செல்பி எடுத்தபோது 8-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பை தகிசர் கிழக்கு மிஸ்கிதா நகர் பகுதியை சேர்ந்தவர் சாவ்லா. துணி வியாபாரி. இவரது ஒரே மகள் ஜான்வி (16 வயது). இவர் சர்வதேச பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை வானம் ஆரஞ்சு நிறத்தில் ரம்மியமாக காட்சி அளித்தது. எனவே சிறுமி வானத்தின் அழகை படம் பிடிக்க விரும்பினார்.
அவர் தந்தையிடம் அனுமதி கேட்டு 8 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு மொட்டை மாடியின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்தபடி சிறுமி ஜான்வி செல்போனில் வானத்தின் அழகை தன்னுடன் சேர்த்து 'செல்பி' எடுத்தார். அப்போது சிறுமி நிலை தடுமாறி 8-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த சிறுமியை அவரது தந்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






