சத்தீஷ்கார் என்கவுண்ட்டர்: 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி


சத்தீஷ்கார்  என்கவுண்ட்டர்: 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை -  பாதுகாப்புப்படையினர் அதிரடி
x
தினத்தந்தி 16 April 2024 6:19 PM IST (Updated: 8 Jun 2024 10:17 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்காரின் கன்கர் மாவட்டம் ஷொட்டிபிதியா பகுதியில் உள்ள ஹபடொலா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று மதியம் 2 மணியளவில் ஹபடொலா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். அதேவேளை, என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story