இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம் - ஆணையம் நடவடிக்கை

கோப்புப்படம்
நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ‘ஆதார்’ என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்துக்காக வழங்கப்பட்ட அடையாள எண் ஆகும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய ஆதாரில் உள்ள விவரங்களை வைத்து பல வகையான நிதி மோசடிகளும் அரங்கேறுகின்றன. இத்தகைய மோசடிகளை தவிர்ப்பதற்காக பல்வேறு புதுப்பிப்புகளை ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அடையாள மோசடியை தடுக்கவும், நலத்திட்டங்களுக்காக ஆதார் எண்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்தவும் மற்றும் தகவல்களை துல்லியமாக வைத்திருக்கவும் ஆதார் ஆணையம் இந்தியா முழுவதும் இறந்த நபர்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை நீக்கி உள்ளது.
இறந்த நபர்களை அடையாளம் காண இந்திய பதிவாளர் ஜெனரல், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பொது வினியோக அமைப்பு மற்றும் தேசிய சமூக உதவி திட்டம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்து இதுதொடர்பான புள்ளி விவரங்கள் பெறப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட ஆதார் எண்கள் வேறு யாருக்கும் மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. ஒருவர் இறந்தவுடன், அது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களின் ஆதார் எண்ணை நீக்குவது அவசியம் என்று ஆதார் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆதார் ஆணையம் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம் தொடர்பாக புகார் அளித்தல் என்ற புதிய அம்சத்தை ‘மை ஆதார்’ என்ற இணையதளத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த சேவை தற்போது 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைக்க பணி நடந்து வருகிறது.






