ஐ.டி. பெண் ஊழியர் ஏரியில் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

சுஷ்மா நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்றார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டம் அட்டகுடா பகுதியை சேர்ந்த இளம்பெண் சுஷ்மா (வயது 27). இவர் ஹைடெக் சிட்டி பகுதியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, சுஷ்மா நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால், அவர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த சுஷ்மாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சுஷ்மாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், மதுபூர் பகுதியில் உள்ள துர்கம் சருவு ஏரியில் பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டனர். அந்த பெண் மாயமான சுஷ்மா என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்ற ஐ.டி.பெண் ஊழியர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






