காக்கிநாடா துறைமுகம் அருகே கப்பலில் அத்துமீறி நுழைந்த 5 பேர் கைது

கடலோர காவல்படை கப்பல் நெருங்கி வருவதைக் கண்டதும், ஊடுருவல்காரர்கள் தங்கள் படகில் தப்பிச் செல்ல முயன்றனர்.
அமராவதி,
காக்கிநாடா அருகே வக்காலப்புடி கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 2.5 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகில் வந்த ஐந்து நபர்களும் பாத்ஃபைண்டர் என்ற கப்பலில் சட்டவிரோதமாக நுழைந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
காக்கிநாடாவில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திடம் உதவி கோரி கப்பல் மாலுமிகள் செய்தி அனுப்பினர். துறைமுகத்திலிருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதன் இடைமறிப்பு படகான ஐ.சி.ஜி.எஸ்.-சி-438 உடனடியாக பாத்பைண்டர் கப்பலை நோக்கி சென்றது.
இந்திய கடலோர காவல்படை கப்பல் நெருங்கி வருவதைக் கண்டதும், ஊடுருவல்காரர்கள் தங்கள் படகில் தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும், கடலோர காவல்படை குழு ஊடுருவல்காரர்களை லாவகமாக பிடித்து, காக்கிநாடாவில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்குக் கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து, அவர்களை மேல்நடவடிக்கைக்காக காக்கிநாடா துறைமுக காவல் நிலையத்திடம் ஒப்படைத்தது.






