5 ஆண்டுகளில் குடியுரிமையை துறந்த 9 லட்சம் இந்தியர்கள்; நாடாளுமன்றத்தில் தகவல்

2011 முதல் 2019 ஆண்டுகளில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளிவிவகார துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் இன்று பேசினார். அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும்போது, இந்திய குடியுரிமையை துறக்க கூடிய தனி நபர்கள் பற்றிய தகவல் பதிவுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு சேகரித்து வருகிறது என்றார்.
இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஏறக்குறைய 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். இதனால் வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள், வெளிநாட்டில் வசிப்பது என்ற முடிவை தேர்ந்தெடுப்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் குடியுரிமையை துறப்பது கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி, 2020-ல் 85,256 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இது தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 1,63,370 (2021), 2,25,620 (2022), 2,16,219 (2023) மற்றும் 2,06,378 (2024) ஆக அதிகரித்து வந்துள்ளது. இதில், 2011 முதல் 2019 ஆண்டுகளில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
இது இந்தியாவை விட்டு மக்கள் வெளிநாடுகளை தேடி செல்லும் மோகம் அதிகரிப்பதற்கான காரணியாகவும் பார்க்கப்படுகிறது.






