இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியலுக்கு முயற்சி: 37 பேர் கைது

கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற சிவசேனா கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று காலை கோவை ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டக் காரர்கள் அத்துமீறி ரெயில் நிலையத்துக்குள் செல்வதை தடுக்க இரும்புத்தடுப்புகள் வைத்து அடைப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
கோவை ரெயில் நிலையம் முன்பு சிவசேனா கட்சியினர் மாநில செயலாளர் முருகன் தலைமையில் கொடியை பிடித்தபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் ரெயில் நிலையம் முன்பு வந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். பிறகு அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதை தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்ற சிவசேனா கட்சியை சேர்ந்த 37 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர். எனவே பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றனர்.






