டெல்லி சாலையில் மீண்டும் கேட்ட பலத்த சத்தம்.. மக்கள் பீதி - காரணம் என்ன.?

மீண்டும் ஏதேனும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததா? என டெல்லி மக்கள் பீதியடைந்தனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகே திடீரென பலத்த சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அப்பகுதியினர், மீண்டும் ஏதேனும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததா? என பீதியடைந்தனர். மேலும், பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக போலீஸ் அவசர எண்ணுக்கு அழைப்பும் வந்தது.
இதையடுத்து, போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது. பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.






