நடுவானில் ஆபத்தை சந்தித்த ஏர் இந்தியா விமானம்- 2 விமானிகள் பணி நீக்கம்

14-ந்தேதி மற்றொரு ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த மாதம் 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பலியானார்கள். இந்த சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து, அதாவது 14-ந்தேதி மற்றொரு ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.
அந்த விமானம் டெல்லியில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு புறப்பட்டது. 900 அடி உயரத்துக்கு அது சென்றபோது கோளாறு ஏற்பட்டு கீழே விழும் நிலைக்கு சென்றுள்ளது. ஆனால் விமானிகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு விமானத்தை தொடர்ந்து இயக்கி விட்டனர்.
அது வியன்னாவில் பத்திரமாக தரை இறங்கியுள்ளது. இதனால் விமான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இது தொடர்பாக அந்த விமானத்தின் விமானிகள் 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன.






