காற்று மாசு அதிகரிப்பு: புதுடெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை

புதுடெல்லியில் நேற்று காற்றின் தரக்குறியீடு 440-ஐ தாண்டியதால் 4-ம் தரநிலை கட்டுப்பாடுகளை காற்றுத்தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது.
காற்று மாசு அதிகரிப்பு: புதுடெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 349 ஆக இருந்தது. இது நேற்று 440-ஐ தாண்டியது. 349 அளவில் இருக்கும்போது நகரில் 3-ம் தரநிலை கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

நேற்று காற்று மாசு அதிகரித்ததைத் தொடர்ந்து 4-ம் தரநிலை கட்டுப்பாடுகளை காற்றுத்தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது. இதனை டெல்லி அரசு செயல்படுத்தியது. இதன்படி மண் அள்ளுதல், தரையைத் தோண்டுதல், குவியல்கள் அமைத்தல், கட்டுமானப்பணிகள் மற்றும் கட்டுமானங்களை இடித்தல் போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளன.

செங்கல் தொழில், சூடான கலவை ஆலைகள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டுத் தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அத்தியாவசிய தேவையை தவிர அனைத்து நடுத்தர மற்றும் கனரக சரக்கு டீசல் வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத்தை தவிர, டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்தக்கூடாது. திறந்த வெளியில் எதையும் எரிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது. தனியார் வாகனங்களில் மின்சாரம், சி.என்.ஜி. மற்றும் பி.எஸ்.-6 ரக கார்களை இயக்கலாம். மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் பாதி பேரை வீட்டில் இருந்து படிக்க, பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com