டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு

7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் இந்த ஆண்டு பசுமைப்பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் பருவமழை ஓய்ந்த பின்பு, இப்போது குளிர் வாட்டத்தொடங்கி உள்ளது. நேற்று டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.5 டிகிரி செல்சியசாக பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாக இருந்தது. காலை 8.30 மணிக்கு காற்றின் ஈரப்பதம் 71 சதவீதமாக இருந்தது. அதேபோல காற்றின் மாசு அளவு, தரக்குறியீட்டில் மோசமான அளவாக இருந்தது. காலை 9 மணி அளவில் காற்று மாசு 284 புள்ளிகளாக இருந்தது.
இந்த அளவு 50-க்கு குறைவாக இருந்தால்தான் சுத்தமான காற்று என்று பொருளாகும். 50 முதல் 100 வரை இருந்தால் பரவாயில்லை ரகம். அதற்கு மேலே சென்றால் மிதமானது , மோசமானது என்று பொருளாகும். டெல்லியில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 12 இடங்களில் காற்றின் தரம் நேற்று ‘மிகவும் மோசமானது' என்று பதிவானது.
இங்கு மாசு புள்ளிகள் 400 வரை சென்றுள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தரக்குறீடு கடுமையானது என்ற அளவில் 430 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் இந்த ஆண்டு பசுமைப்பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பட்டாசுகள் வெடித்தால் காற்றின் தரம் இன்னும் மோசமடையலாம்.






