அல்பலா பல்கலைக்கழக குழும தலைவரை 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 10-ந் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சதித்திட்டம் தீட்டி இந்த தாக்குதலில் ஈடுபட்டதை தேசியபுலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கூட்டுச்சதியில் ஈடுபட்ட டாக்டர்கள் அகமது ராதர், முசமில் ஷகீல், சாகின் சயீத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது கார் வெடிப்பு சம்பவத்தில் பலியாகிவிட்டார்.
இந்த டாக்டர்கள் அனைவரும் டெல்லி அருகே பரிதாபாத் பகுதியில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து தான் குண்டு வெடிப்புக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் நம்புகிறார்கள். இங்கு பணியில் இருந்தபோது தான் டாக்டர் உமருக்கு ரூ.20 லட்சம் பணம் வந்திருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தை ஒட்டிய பகுதியில் பயங்கரவாதிகள் வாடகைக்கு எடுத்திருந்த அறைகளில்தான் 2 ஆயிரத்து 900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. இதனால் இந்த பயங்கரவாத செயலில் அல்பலா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தாலும், பல ஆதாரங்கள் அங்கு சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பண மோசடி பிரிவுகளின் கீழ் அமலாக்க துறையும் இந்த பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அல்பலா பல்கலைக்கழகம், டெல்லி ஒக்லாவில் உள்ள அதன் தலைமை அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய 25 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக்கின் வீட்டுக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிகாலை 5 மணிக்கே சென்று அவரை மடக்கி விசாரித்தனர்.
அமலாக்கத்துறையின் இந்த சோதனையில் அங்கு பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. பல்கலைக்கழக அறக்கட்டளை நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்பலா பல்கலைக்கழக குழுமத்தின் தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷீடல் சவுத்ரி முன் ஜவாத் அகமது சித்திக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சித்திக்கை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.






