எஸ்.ஐ.ஆர்.விவகாரம்: மக்களவையில் டிச.9,10-ம் தேதி விவாதம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரண்டாவது நாளாக மக்களவை முடங்கியது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியது. அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவைக்கு வந்த ஜார்ஜியா நாட்டு எம்.பி.க்கள் குழுவை சபாநாயகர் ஓம்.பிர்லா வரவேற்றார். அதை தொடர்ந்து கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதைதொடர்ந்து அவர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து எஸ்.ஐ.ஆர். தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் தங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவையை 12 மணி வரை சபாநாயகர் ஓம்.பிர்லா ஒத்திவைத்தார். 12 மணிக்கு பிறகு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் இதே பிரச்சினையை தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு கூறும்போது,
எதிர்க்கட்சி தலைவர்களை எஸ்.ஐ.ஆர் தொடர்பான விவாதத்திற்கு அழைத்துள்ளோம். பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளனர். ஒரு பிரச்சினை மற்றவற்றை விட அதிகமாக இருக்க முடியாது. இதனால் அவை செயல்படட்ட்டும் என்றார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் 2 மணி வரை அவையை மீண்டும் ஒத்திவைத்தார். தொடர்ந்து 2 மணிக்கு கூடிய அவை எதிர்க்கட்சிகள் அதே பிரச்சினையை முன்வைத்தனர். எஸ்ஐஆர் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கிரண் ரிஜ்ஜு கூறுகையில், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் காலக்கெடு விதிக்கக்கூடாது எனக்கூறியிருந்தார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடந்தது.
இதன் பின்னர், வந்தே மாதரம் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மக்களவையில் வரும் 8 ம் தேதி விவாதம் நடக்க உள்ளது. 10 மணி நேரம் நடக்கும் இந்த விவாதத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். மறுநாள் 9 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடக்கும். இதற்கும் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுநாள் ( டிச.,10) மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேவால் விவாதத்துக்கு பதில் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.






