‘போக்சோ’ வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த விசாரணை கைதி 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

‘போக்சோ’ வழக்கில் சிக்கிய பின்பு கவுதம் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ‘போக்சோ’ வழக்குப்பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ‘போக்சோ’ வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிட்டிசிவில் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கவுதமின் மரபணு பரிசோதனையிலும், அவர் தான் சிறுமியை பலாத்காரம் செய்தது என்பது உறுதியானது. இதுபற்றி சிறைவாசம் அனுபவிக்கும் கவுதமுக்கும் தெரியவந்தது. இதற்கிடையில், இந்த போக்சோ வழக்கு விசாரணை, சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்த பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து போலீசார் நேற்று காலையில் அழைத்து வந்தனர்.
சிட்டிசிவில் கோர்ட்டின் 5-வது மாடிக்கு கவுதம் அழைத்து செல்லப்பட்டார். கவுதமை பார்க்க, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூட வந்திருந்தனர். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக கவுதம் கையில் போடப்பட்டு இருந்த விலங்கை போலீசார் கழற்றினர். உடனே போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய கவுதம், 5-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்தார். இதில், அவர் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கவுதம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கவுதம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ‘போக்சோ’ வழக்கில் சிக்கிய பின்பு கவுதம் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மரபணு பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை கவுதமுக்கு எதிராக அமைந்ததாலும், கோர்ட்டுக்கு வந்திருந்த குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் அவமானம் தாங்க முடியாமல் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






