ரெயிலின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்த நபரால் பரபரப்பு


ரெயிலின் மேற்கூரையில்  அமர்ந்து பயணித்த நபரால் பரபரப்பு
x

உடல் கருகி உயிருக்கு போராடிய நபர் மின்சார ரெயில் மேற்கூரையிலேயே பரிதவித்து கொண்டிருந்தார்.

மும்பை,

மும்பையை அடுத்த திவா ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில் ஏ.சி. மின்சார ரெயில் ஒன்று பிளாட்பாரம் நம்பர் 1-ல் வந்து நின்றது. அந்த ரெயிலின் மேற்கூரையில் ஆசாமி ஒருவர் அமர்ந்தபடி பயணம் செய்திருந்தார். ரெயில் நிலையம் வந்த பின்னர் அவர் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது கால் இடறியதில் அவர் மீது உயர் மின்அழுத்த மின் கம்பி உரசியது. இதில், அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவர் அணிந்திருந்த ஆடை மீதும் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் உடல் கருகினார்.

இதனை கண்ட பயணிகள் அலறி சத்தம் போட்டனர். தகவலறிந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடல் கருகி உயிருக்கு போராடிய நபர் மின்சார ரெயில் மேற்கூரையிலேயே பரிதவித்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கல்வா சிவாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் பின்னர் அந்த ஏ.சி. மின்சார ரெயில் சுமார் 10.38 மணி அளவில் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

1 More update

Next Story