டெல்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு

டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்றார்.
புதுடெல்லி,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும், கூட்டணி விவகாரம் குறித்தும் அமித்ஷா மற்றும் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வில் புதிய தேசிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அமித்ஷாவுடனான அண்ணாமலையின் சந்திப்பு கவனத்தை பெற்றுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.






