பாம்பை பிடித்து கழுத்தில் மாலைபோல் அணிந்துகொண்டு விளையாடிய 70 வயது சினேக் பாட்டி

70 வயதான மூதாட்டி தன் வீட்டிற்குள் புகுந்த சாரைப் பாம்பை துணிச்சலாகப் பிடித்துள்ளார்.
புனே,
மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டம், முள்ஷி தாலுகாவில் உள்ள காசர் அம்போலி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது சகுந்தலா சுதார் என்ற மூதாட்டி, தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த சாரை பாம்பை சிறிதும் அஞ்சாமல் கையில் பிடித்து கழுத்தில் போட்டு விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பை அருகில் காணும் போதே பெரும்பாலானோர் பயந்து அலறி அடித்து ஓடிவிடுவார்கள். ஆனால் சகுந்தலா பாட்டி, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பாம்பை பிடித்து மிகச் சாதாரணமாக கையாளும் வீடியோ, பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. பாம்புகள் குறித்து உள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றவே இந்த செயலைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், பலரும் அவருடைய தைரியத்தையும் விழிப்புணர்வையும் பாராட்டி வருகின்றனர். 70 வயதிலும் இத்தகைய துணிச்சல் காணக் கிடையாது என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.






