ஒடிசாவில் கொடூரம்: பெட்ரோல் ஊற்றி சிறுமியை உயிரோடு எரித்த மர்ம கும்பல்; எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், வார்டுக்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில், பலந்தா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பயாபர் கிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமி, தோழிகளுடன் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் சிறுமியை ஆற்றங்கரையோர பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். 3 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது.
இதில் சிறுமிக்கு 70 முதல் 75 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் எப்படியோ நடந்து பக்கத்தில் இருந்த வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு, அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் மருத்துவமனையில், சிறுமி சிகிச்சை பெறும் பிரிவுக்கு வெளியே பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது நோயாளிகளுக்கும், டாக்டர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் என கண்டனம் தெரிவித்து புவனேஸ்வர் எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதி பேரை போலீசார் கைது செய்தனர். எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும், வார்டுக்கு வெளியே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில், தேவைப்பட்டால், சிறுமியை அரசு செலவில் விமானத்தில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படும் என முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி கூறினார். குற்றவாளிகள் தப்ப முடியாது. அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.






