அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல்


அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்:  ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2025 9:59 AM IST (Updated: 11 Oct 2025 10:50 AM IST)
t-max-icont-min-icon

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை என முத்தகி கூறினார்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. தலீபான் அரசின் வெளியுறவு மந்திரியாக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் புதுடெல்லிக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டார். அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது.

இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது முத்தகி, பெண்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெண்களை பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இதுபோன்ற காரணங்களாலல் அந்நாட்டுடனான தொடர்பில் இருந்து இந்தியா விலகியே உள்ளது.

எனினும், அவருடைய இந்திய வருகையால், இரு நாடுகள் இடையேயான உறவு வலுப்படும் என பார்க்கப்படுகிறது. ஆனால், தூதரகத்தில் அவர் நடந்து கொண்ட ஆத்திரமூட்டும் வகையிலான இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் தங்களுடைய எதிர்ப்பை கூட்டாக பதிவு செய்தனர். ஆடையை சரியாக அணிய வேண்டும் என்ற கொள்கையை மதித்து, அதற்கேற்பவே அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் வருகை தந்திருந்தனர் என அவர்கள் தெரிவித்தனர்.

முத்தகியின் இந்த நடவடிக்கை எந்த வகையிலானது என்று அவர்கள் கேள்வியும் எழுப்பினர். இந்நிலையில், இந்த சந்திப்பில் பேசிய முத்தகி, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை. அதனால், அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

1 More update

Next Story