கொடூர சம்பவம்: ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. தலையை தீவிரமாக தேடும் போலீசார்

பெண்ணை கொன்று உடலை பல இடங்களில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தலையை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
துமகூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கோலால் அருகே சிம்புகனஹள்ளி முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று காலை ஒரு கருப்பு நிற பாலிதீன் பை கேட்பாரற்று கிடந்தது.
இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அந்த பாலிதீன் பையை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ஒரு கை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் பற்றி கொரட்டகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த கையை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே அந்த கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு பாலிதீன் பையில் இன்னொரு கையும் கிடைத்தது. அதையடுத்து இன்னொரு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சில பாலிதீன் பைகளில் துண்டிக்கப்பட்ட 2 கால்களும், இதயம், வயிறு, குடல் ஆகிய உடல் பாகங்களும் கிடைத்தன.
அதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த உடல் பாகங்களை கைப்பற்றினர். அதாவது உடல் பாகங்கள் கோலால், கொரட்டகெரே, கவுரிபிதனூர் பகுதிகளில் 5 இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவில் அருகே கையும், கோவில் அருகே உள்ள லிங்கபுரா பாலத்தின் அருகே வயிற்று பகுதி உடல் பாகமும், சிம்புகனஹள்ளி பாலம் அருகே குடல், இன்னொரு கையும் கருடாச்சல ஆற்றங்கரையில் ஒரு சாக்கு மூட்டையில் உடல் சதைகளும் துண்டு, துண்டாக கிடந்தன.
அதாவது சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இதையடுத்து தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் நீண்டநேரமாக தேடியும் தலையை மீட்க முடியவில்லை. உடல் பாகங்களை ஒன்றாக சேகரித்து போலீசார் ஆய்வு செய்ததில் அது பெண்ணின் உடல் பாகங்கள் என்பதும், வேறு ஏதோ பகுதியில் பெண்ணை கொன்று, அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டு அவற்றை பாலிதீன் பைகளில் வைத்து மர்மநபர்கள் வீசிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து உடல்பாகங்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், தடய அறிவியல் சோதனைக்காகவும் துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான பெண் யார்?, என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்?, கொலையாளிகள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அத்துடன் காணாமல் போன பெண்களின் விவரங்களை கேட்டு அதன் அடிப்படையில் கொலையான பெண் பற்றியும், கொலைக்கான பின்னணி பற்றி விசாரிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதுபோல் தலை மற்றும் உடல் பகுதியையும் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் சொந்த ஊர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகாவில் உள்ள கொல்லஹள்ளி கிராமம் ஆகும். கொரட்டகெரே தொகுதியில் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார்.
அவரது சொந்த கிராமத்தின் அருகே தான் பெண்ணை கொன்று உடலை கூறுபோட்டு 5 இடங்களில் வீசிச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. இதனால் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






