பீகார்: மரத்திற்கு ராக்கி கயிறு கட்டி ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய நிதீஷ் குமார்


பீகார்:  மரத்திற்கு ராக்கி கயிறு கட்டி ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய நிதீஷ் குமார்
x

பருவநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை குறைப்பதற்கு, மரக்கன்று நடுவது அவசியம் என நிதீஷ் குமார் கூறினார்.

பாட்னா,

சகோதர, சகோதரியின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்களுடைய சகோதரரின் கையில் ராக்கி கயிறு கட்டி, அன்பை பரிமாறி கொள்வார்கள். இதனால், சகோதர சகோதரியின் பாசம் வலுப்படும் என நம்பப்படுகிறது.

இதனை வடமாநில மக்கள் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். அப்போது, சகோதரருக்கு பரிசுகளையும் சகோதரி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில், பீகார் முதல்-மந்திரியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், தலைநகர் பாட்னாவில் ரக்‌ஷா பந்தன் விழாவை நேற்று கொண்டாடினார்.

இதன்படி அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கான இடத்துக்கு வந்த நிதீஷ் குமார், மரம் ஒன்றுக்கு ராக்கி கயிறு கட்டி ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார். அவர், கடந்த 13 ஆண்டுகளாக மரத்துக்கு ராக்கி கயிறு கட்டி ரக்‌ஷா பந்தன் கொண்டாடும் வழக்கம் கொண்டுள்ளார்.

பீகார் மர பாதுகாப்பு தினமும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டே அவர் மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். பருவநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை குறைப்பதற்கு, மரக்கன்று நடுவது அவசியம் என அவர் அப்போது கூறினார்.

இதற்காகவே, பாதுகாப்பிற்கான கயிறை இன்று மரம் ஒன்றிற்கு கட்டி விட்டேன் என்றும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். ஜல ஜீவன் ஹரியாலி பிரசாரம் மற்றும் பிற திட்டங்களின் வழியே பெரிய அளவில் மரக்கன்று நடும் விழாவையும் மேற்கொண்டு வருகிறோம் என நிதீஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story