பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்

பெண்கள் சமூக வலைதளங்களில் படங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுனில் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் செல்போனில் வாட்ஸ்-அப்பில் புதிய எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில் அந்த பெண்ணின் படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த படத்தை அனுப்பிய நபர், உங்கள் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், படங்களை அழித்துவிட்டு அந்த எண்ணையும் பிளாக் செய்துவிட்டார்.
இந்த நிலையில் சில நாட்கள் கழித்து அந்த நபர், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட பெண்ணின் படத்தை அவரது கணவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளார். பின்னர், தனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால், இந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும், அவரது கணவரும், இதுபற்றி சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தை மர்மநபர் எடுத்து ஆபாசமாக சித்தரித்து பணம் கொடுக்கவில்லை என்றால் வெளியிடுவதாக மிரட்டியது தெரியவந்தது. இதனால், பெண்கள் சமூக வலைதளங்களில் படங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.






