விதிகளை மீறி... டெல்லி கடமை பாதையில் நடந்து சென்ற பிரதமர் மோடி


விதிகளை மீறி... டெல்லி கடமை பாதையில் நடந்து சென்ற பிரதமர் மோடி
x

வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-ம் ஆண்டு கால கொண்டாட்டமும் இன்று நடந்தது.

புதுடெல்லி,

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. விமான சாகசங்கள், ராணுவ அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் என குடியரசு தின கொண்டாட்டம் களை கட்டியது.

போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. குடியரசு தினத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.

இதனை, ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் உள்ளிட்டோரும் கண்டுகளித்தனர். இதேபோன்று வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-ம் ஆண்டு கால கொண்டாட்டமும் கூட இன்று நடைபெற்றது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் முடிந்ததும், விதிமுறைகளை மீறி, பிரதமர் மோடி டெல்லி கடமை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றார். பொதுவாக பிரதமர் போன்ற முக்கிய பதவிகளை வகிப்பவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கான விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

எனினும், அதனை மீறி சில சமயங்களில் பொதுமக்களை நோக்கி தலைவர்கள் செல்வதுண்டு. அதுபோன்று, பிரதமர் மோடி சென்றபோது, குடியரசு தின நிகழ்ச்சியை காண ஆர்வத்துடன் வந்து இருக்கைகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்களை நோக்கி கையசைத்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அவர் டெல்லி கடமை பாதையின் மற்றொரு பகுதிக்கும் சென்றார். அப்போது சிலர் அவருடன் புகைப்படங்களை எடுத்து கொண்டனர். பலர் தேசிய கொடியுடன், பாரத் மாதா கி ஜெய் என முழங்கினர். கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். குழந்தைகளும் அவரை காண இருக்கையில் எழுந்து நின்றனர். சிலர் மோடி மோடி என கோஷம் எழுப்பினர்.

இதன்பின்னர் அவர் காரில் ஏறினார். அப்போது மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். அவர் இதுபோன்று விதிமுறைகளை மீறி செல்வது என்பது முதன்முறையல்ல. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுபோன்று அவர் நடந்து செல்வது வழக்கம்.

1 More update

Next Story