கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

இடுக்கியில் உள்ள குட்டிக்கானம் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையில் கவிழ்ந்தது.
திருவனந்தபுரம்,
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் தனியார் பேருந்தில் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். அந்த பேருந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் வழியாக சென்றபோது, வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர். இதில் 10 பேருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






