‘பயங்கரவாத அமைப்புடன் எனது மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியாது’ - பெண் டாக்டரின் தந்தை

கோப்புப்படம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதுடெல்லி,
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பெண் டாக்டர் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டார்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி லக்னோவில் உள்ள ஷாஹீன் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது. அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், பெண் டாக்டரின் குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.
அப்போது பெண் டாக்டரின் தந்தை செய்யது அகமது அன்சாரி கூறுகையில், ‘எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எனது மூத்த மகன் ஷோயப் என்னுடன் இங்கே வசிக்கிறார். மகள் ஷாஹீன் சையத் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் அலகாபாத்தில் மருத்துவம் பயின்றார். இன்று காலை அவரது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனது மகளுக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது எனக்கு தெரியாது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது இளைய மகன் பர்வேஸ் அன்சாரி நீண்ட காலமாக என்னுடன் இல்லை’ என்று தெரிவித்தார்.
முன்னதாக பெண் டாக்டர் ஷாஹீன் இதுகுறித்து அரியானா போலீசார் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் ஏவுகணை தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் மனைவிகளை ஒன்றிணைத்து கடந்த அக்டோபரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் மகளிர் பிரிவு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்புக்கு ஜமாத்-அல்-மோமினா என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் தங்கை சாதியா அசார், மகளிர் பிரிவின் தலைவராக உள்ளார். சாதியாவின் கணவர் யூசுப் அசார், காந்தஹார் விமான கடத்தலின் மூளையாக செயல்பட்டவர் ஆவார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது அவர் உயிரிழந்தார். இதற்கு பழிவாங்க சாதியா அசார், தீவிரவாத மகளிர் பிரிவு தலைவராக பதவியேற்று இந்திய பெண்களை இணையதளம் வாயிலாக மூளைச் சலவை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் இந்திய மகளிர் பிரிவு தலைவராக மருத்துவர் ஷாஹீன் நியமிக்கப்பட்டு உள்ளார். ஷாகினோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.






