நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக கூறி மோசடி ; 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட 2 பேரையும் 16ம் தேதி வரை காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது.
இந்நிலையில், நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக கூறி மோசடி செய்த 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த சந்தீப் ஷா, சலீம் படேல் இருவரும் நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், நீட் தேர்வு மதிப்பெண்களை மாற்றி அமைக்க முடியும் என்றும் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் போலி வாக்குறுதி அளித்துள்ளனர். மதிப்பெண்களை மாற்ற தலா 90 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர். நீட் தேர்வு எழுதிய பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை மாற்றி அமைப்பதாக ஏமாற்றப்பட்டது குறித்து உணர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் இது குறித்து புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, மோசடியில் ஈடுபட்ட சந்தீப் ஷா, சலீம் படேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் 16ம் தேதி வரை காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.






