தன்னை விட 15 வயது மூத்த பெண் என்ஜினீயர் மீது காதல்; நள்ளிரவில் பால்கனி வழியாக நுழைந்த கல்லூரி மாணவர்...அடுத்து நடந்த பகீர் சம்பவம்

சம்பவத்தன்று இரவு ஷர்மிளா தனது வீட்டில் உள்ள கட்டிலில் தனியாக இருந்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு ராமமூர்த்திநகர் அருகே சுப்பிரமணிய லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்தவர் சர்மிளா (வயது 34). இவரது சொந்த ஊர் மங்களூரு ஆகும். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். தனது தோழியுடன் சர்மிளா வசித்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு சர்மிளாவின் தோழி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார். கடந்த 3-ந் தேதி இரவு சர்மிளா வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.
இதுபற்றி அறிந்த ராமமூர்த்திநகர் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் பிடித்த தீயில், புகையால் சர்மிளா மூச்சு திணறி பலியானதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், சர்மிளா சாவில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான கர்னல் (19) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
தன்னைவிட 15 வயது மூத்தவரான சர்மிளாவை ஒரு தலையாக கர்னல் காதலித்துள்ளார். இதுபற்றி சர்மிளாவிடம் அவர் கூறியது இல்லை. இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசித்த சர்மிளாவுடன் அடிக்கடி பேசி வந்ததால் அவர் மீது கர்னலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு ஷர்மிளா தனது வீட்டில் உள்ள கட்டிலில் தனியாக இருந்துள்ளார். அப்போது கர்னல் ஷர்மிளா வீட்டின் பால்கனி வழியாக நைசாக நுழைந்துள்ளார். பின்னர் அங்கு சர்மிளாவை பின்பக்கமாக அவர் கட்டி அணைத்துள்ளார். பின்னர் ஷர்மிளாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர் கர்னலிடம் இருந்து தன்னை பாதுகாக்க முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த கர்னல் ஷர்மிளாவை அவரது கழுத்தில் தாக்கி உள்ளார். இதில் ஷர்மிளா சுயநினைவை இழந்து கிழே விழுந்துள்ளார். அப்போது ஷர்மிளா இந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் கர்னல் சுயநினைவை இழந்த ஷர்மிளாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.மேலும் ஷர்மிளா கொலை செய்யப்பட்டது தெரியாமல் இருக்க இயற்கையான முறையில் அவர் இறந்தது போல் காட்ட கர்னல் ஷர்மிளா பிணமாக கிடந்த படுக்கை அறைக்கு தீ வைத்து உள்ளார்.
பின்னர் அந்த தீ வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் வந்து பார்த்த போது தீ விபத்தில் ஷர்மிளா மூச்சு திணறி இறந்ததுபோல் தெரிய வந்தது. போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் திட்டமிட்டு கொலையை மறைக்க கர்னல் வீட்டிற்கு தீ வைத்து நாடகமாடியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கல்லூரி மாணவர் கர்னல் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






