காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர் அதிரடி கைது

காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாலிகிராமம் டவுன் பகுதியை சேர்ந்தவர் லோகித். இவர் காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இந்தநிலையில், அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை லோகித் காதலித்து வந்துள்ளார். இருவரும் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெண்ணிற்கு வேறொரு இடத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
இந்தநிலையில், தீபாவளி பண்டிகைக்கு அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இதற்கிடையே இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை லோகித் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெற்றோரிடம் பெண் தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் சாலிகிராமம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
அப்போது அந்த வீடியோவையும் அவர்கள் போலீசாரிடம் காண்பித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வீடியோ 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். அதாவது இளம்பெண்ணும், லோகித்தும் காதலித்த நேரத்தில் ஒரு தோட்டத்தில் வைத்து இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அதனை லோகித் மறைமுகமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். தனக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்காததால் லோகித் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து லோகித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.






