சைவத்திற்கு பதில் அசைவ பிரியாணி; ஓட்டல் உரிமையாளரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்

தப்பியோடிய அபிஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் கன்ஹி - பிதோரா நெடுஞ்சாலையில் விஜய் குமார் (வயது 47) என்பவர் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலுக்கு நேற்று இரவு 11 மணியளவில் அபிஷேக் என்ற இளைஞர் உணவு வாங்க வந்துள்ளார். சைவ பிரியாணி பார்சல் செய்து தருமாறு அபிஷேக் கேட்டுள்ளார். ஆனால், தவறுதலாக விஜய குமார் அசைவ பிரியாணி பார்சல் செய்து கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு சென்ற அபிஷேக் பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் அசைவ பிரியாணி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தனது கூட்டாளிகளுடன் ஓட்டலுக்கு மீண்டும் வந்து விஜய் குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அபிஷேக் தான் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் ஓட்டல் உரிமையாளர் விஜய் குமாரை சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஜய் குமாரை மீட்ட ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு விஜய் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய அபிஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சைவ பிரியாணிக்கு பதில் தவறுதலாக அசைவ பிரியாணி கொடுத்த ஓட்டல் உரிமையாளரை வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






