நோயாளி போல் அறிமுகமான சைபர் மோசடி கும்பல்: ரூ. 2.50 லட்சம் இழந்த டாக்டர்

சைபர் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்ட்டம் ஷாபூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஜிஜேந்திர குமார். இவர் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். மேலும், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஜிஜேந்திர குமாரை ஒரு நபர் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனை வேண்டுமென அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, மருத்துவ ஆலோசனை வழங்கிய டாக்டர் ஜிஜேந்திர குமார் ஆலோசனைக்கான பணம் வழங்குமாறு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பணம் அனுப்ப ஜிபே கியூ ஆர் கோர்டை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு அந்த நபர் கூறியுள்ளார்.
டாக்டரும் தனது வங்கி கணக்கிற்கான கியூ ஆர் கோர்ட்டை அனுப்பியுள்ளார். கியூ ஆர் கோர்டு அனுப்பப்பட்ட சில நிமிடங்களில் டாக்டர் ஜிஜேந்திர குமாரின் வங்கி கணக்கில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக டாக்டருக்கு செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டாக்டர், தான் சைபர் மோசடி கும்பல் வலையில் சிக்கியது, நோயாளிபோல் நடித்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.50 லட்சம் பணத்தை அந்த கும்பல் எடுத்ததையும் அவர் உணர்ந்தார். உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டாக்டர் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.50 லட்சத்தை கொள்ளையடித்த சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






