யார் இந்த உமர்? காஷ்மீர் டாக்டரின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்கச் செய்த பயங்கரவாதியின் அடையாளம் தெரிந்தது.
புதுடெல்லி,
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் அரியானா மாநிலம் பரிதாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
13 பேர் பலி
இந்த வெடிச்சம்பவம் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போல இருந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை உள்துறை மந்திரி அமித்ஷா இரவோடு இரவாக சென்று பார்த்தார். சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
தொடக்கத்தில் இந்த சம்பவம் சாதாரணமானதாக தெரிவிக்கப்பட்டது. காரில் கியாஸ் சிலிண்டர் அல்லது பேட்டரி வெடித்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் பாதிப்புகளை பார்க்கையில் அது திட்டமிட்ட நாசவேலை என்பதை அறிய முடிகிறது. சம்பவம் நடந்த இடத்தில் ஒரு மனிதரின் உடல் பாகங்கள் சின்னா பின்னமாக சிதைந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
தற்கொலை தாக்குதலா..?
சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு படை, புலனாய்வுப்படை, தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், டெல்லி போலீசார், மத்திய தொழிலக போலீஸ் படை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் படைகள் முழு மூச்சில் கள ஆய்வுக்கு இறக்கப்பட்டன. இரவில் தொடங்கி விடிய விடிய இவர்கள் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
போலீசாரின் அதிரடி விசாரணையில், இந்த கார் வெடிப்பு சம்பவம், தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. காரில் இருந்தவர்கள் வெடிபொருளான அம்மோனியம் நைட்ரேட், எளிதில் தீப்பற்றக்கூடிய ஆயில் ஆகியவற்றை நிரப்பி கொண்டு வந்து அதில் டெட்டனேட்டரை பயன்படுத்தி வெடிக்கச் செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில் சிதைந்து கிடந்த உடல், அந்த காரை ஓட்டிச்சென்றவரின் உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் பரிசோதனையில் இது உறுதி செய்யப்படும்.
இந்த சம்பவத்துக்கும், பரிதாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. பரிதாபாத்தில் பயங்கரவாத செயலுக்கான சதி முறியடிக்கப்பட்ட ஆத்திரத்தில், பயங்கரவாதிகள் இந்த செயலை செய்துள்ளனர்.
உமர் முகமது
காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களும் இங்குதான் பணியாற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது.
சம்பவத்துக்கு காரணமான கார், பரிதாபாத்தில் இருந்து காலை 8 மணி அளவில் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. டெல்லி-அரியானா எல்லையில் உள்ள பதர்பூர் சுங்கச்சாவடியை அது கடந்தபோது மணி 8.04. பின்னர் 8.20 மணிக்கு அது ஓக்லா தொழில்மனை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பி உள்ளது. எரிபொருளை நிரப்பிய பிறகும் சிறிதுநேரம் கார் அங்கு நின்றுள்ளது. காரின் எண் தெளிவாக கண்டறியப்பட்டு உள்ளது.
ஒரே பகுதியில் 3 மணி நேரம் நின்ற கார்
இதன்பின்னர் கார் பிற்பகல் 3.20 மணி அளவில் செங்கோட்டை அருகே சுனேரி மசூதி அருகே உள்ள ‘பார்க்கிங்’ பகுதிக்குள் நுழைந்த காட்சிகள் கிடைத்தன. இடைப்பட்ட நேரத்தில் கார் எங்கு சென்றது? என்பது தெரியவில்லை. போலீசார் அதை வெளியிடவில்லை. பார்க்கிங் பகுதியில் கார் சுமார் 3 மணி நேரம் நின்றுள்ளது.
அப்போது, காருக்குள் முகக்கவசம் அணிந்தவாறு டாக்டர் உமர் முகமது அமர்ந்திருந்த காட்சிகளையும் கண்காணிப்பு கேமராவில் இருந்து போலீசார் கைப்பற்றி வெளியிட்டுள்ளனர். இதன்பிறகு கார், மாலை 6.20 மணிக்கு பிறகு அங்கிருந்து வெளியேறியது. தர்யாகஞ்ச் நோக்கி அது சென்றது. அப்போது சாலையில் கடுமையான நெரிசல். இதனால் கார் ஊர்ந்து சென்றது. இந்த நிலையில் சுபாஷ் மார்க் சிக்னலில் சென்றபோது மாலை கார் வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்றுமுன்தினம் டெல்லி முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டது. ஓட்டல்கள், வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இதில் 4 பேர் சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார் டெல்லியில் எங்கு எங்கெல்லாம் சென்றது? என்பதை அறிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கேமரா பதிவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
மேலும் சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் BNS வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில்நிலையம் இன்று (புதன்கிழமை) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த உமர்?
தற்கொலைப்படை பயங்கரவாதியாக கருதப்படும் டாக்டர் உமர் முகமது காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர். கடந்த 2017-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பை முடித்தார். அதன்பிறகு மேற்கண்ட டாக்டர்கள் தொடர்பில் அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது. இவரே காரை வாங்கி இந்த வெடிப்புக்கு பயன்படுத்தி உள்ளார்.
கொடுஞ்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்
டெல்லி செங்கோட்டை எதிரே நேற்று முன்தினம் வெடித்த கார், வெள்ளை நிறத்திலானது. அது பரிதாபாத் செக்டார் 37-ல் உள்ள ‘ராயல் கார் ஷோன்’ என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டார்.
சம்பவம் தொடர்பாக காரின் முதல் உரிமையாளர் முகமது சல்மான், அரியானாவில் கைது செய்யப்பட்டார். இது அரியானாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். 2014-ம் ஆண்டு இந்த கார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்பிறகு டெல்லியில் ஒருவருக்கு இந்த காரை சல்மான் விற்றுள்ளார். இதன்பிறகு 2 கைகள் மாறி ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த அமீர் என்பவருக்கு விற்றுள்ளார். அவர் உமர் முகமதுவுக்கு கொடுத்துள்ளார். இப்படி பல கைகள் மாறிய காரை, திட்டமிட்டே இந்த கொடுஞ்செயலுக்கு உமர் முகமது பயன்படுத்தியிருப்பார் என கூறப்படுகிறது. இவர்களில் சல்மானிடம் இருந்து காரை வாங்கிய நபரும் போலீசில் பிடிபட்டு உள்ளார்.
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானதாக கூறப்படும் டாக்டர் உமரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. ஏற்கனவே உமரின் தாயார் சமீமா பேகம் மற்றும் 2 சகோதரர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். வெடிவிபத்தில் இறந்த உமரை அடையாளம் காணும் வகையில், சமீமாபேகத்துக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் டாக்டர் உமரின் தந்தை குலாம் நபி பாத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடக்கிறது. மேலும் உமருடன் பணியாற்றிய 3 டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கார் பற்றிய மேலும் ஒரு கண்காணிப்பு கேமரா பதிவு போலீசாரிடம் சிக்கி உள்ளது. அந்த காருக்கு டெல்லி செங்கோட்டை அருகே கடந்த மாதம் 29-ந்தேதி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்கியதற்கான ஆதாரம் அதில் கிடைத்திருக்கிறது. 3 வாலிபர்கள் அந்த வீடியோவில் உள்ளனர். அவர்களுக்கும் இந்த நாசவேலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
டெல்லியில் கார் வெடித்த இடத்தில் போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் ஆதாரங்களை சேகரித்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு சிலிண்டரும் கிடந்தது. அது சமையல் கியாஸ் சிலிண்டர் அல்ல. வேறு வித சிலிண்டர் ஆகும். இதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது எங்கிருந்து விழுந்தது? இதனையும் வெடிக்க முயற்சி செய்தனரா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.






